12/08/2025

நட்பின் கதை

நட்பென்பது யாதெனில் வாழ்க்கைப் பயணத்தில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது. ஏன், பேசிக்கொள்ளாமலே ஒரு *புன்முறுவல் பூப்பதாகவும்* இருக்கலாம்.

மனித வாழ்க்கையின் மிக முக்கியமான, ஆழமான உறவுகளில் நட்பு தனித்துவமானது. அது ரத்த உறவையொத்த பிணைப்பைக் கொண்டிருந்தாலும், எந்தவித கட்டாயமும் இன்றி, மனதின் ஆழத்தில் இருந்து தானாகப் பூக்கும் பூவைப் போன்றது. ஒருவரின் வாழ்க்கைப் பயணத்தில், இன்பத்திலும் துன்பத்திலும் உடன்வரும் ஏதோவொன்றாகக் கூட இருக்கலாம் அது.

நட்பென்பது வெறும் பேச்சால் மட்டும் கட்டப்பட்டது அன்று. ஒருவருக்கொருவர் தத்தம் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதும் நட்பின் வெளிப்பாடுகள்தான். ஆனால், அதைவிட மேலானது மௌனத்தின் மொழி. சில நேரங்களில், ஆயிரம் வார்த்தைகள் சொல்ல முடியாத உணர்வுகளை, இரு நண்பர்களுக்கு இடையேயான ஒரு புன்முறுவல் ஊட்ட வேண்டிய உணர்வினைப் பூக்க வைத்துவிடும். அந்தச் சிரிப்பில், ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையும், புரிதலும், அன்பும் அடங்கியிருக்கும். எதிர்பார்ப்புகள் இல்லாமல் கொடுப்பதும், ஆறுதல் சொல்வதும், தவறு செய்தால் சுட்டிக்காட்டுதும்தான் அதன் இலக்கணம். அது ஒரு பெரிய ஆலமரத்தின் நிழலைப் போன்றது. அதன் அடியில் அமரும்போது, எல்லா கவலைகளும் மறைந்து, மனம் அமைதி அடையும்.

வாழ்க்கைப் பாதையில், நாம் பலரைச் சந்திக்கிறோம்; பலருடன் பழகுகிறோம். ஆனால், ஒரு சிலரே நம் இதயத்தில் அவர்களுக்கானதொரு இடத்தைப் பிடிக்கின்றனர். அவர்கள்தான் நம் *நண்பர்கள்* . அவர்களின் வருகை நம் வாழ்வை வண்ணமயமாக்குகிறது. எனவே, அத்தகைய நட்பைப் போற்றுவது கடமையாகும். அந்தப் புன்முறுவல்களின் கதைகளும், பேசாத வார்த்தைகளின் பொருண்மியங்களும் என்றென்றும் நீடிப்பதே நட்பின் கதையாகத் தொடரும்.

கண்டம் விட்டுக் கண்டமாக அந்நியப்பட்டுவிட்ட நமக்கு, *வேணுகோபால்* என்பவர் யாரென்றே தெரியாது. புனைவாக நாம் அடித்து விட்ட கதைகளைக் கண்டவர், தனித்தகவல்களாக அவ்வப்போது எதையாவது அனுப்புவார். முன்பின் தெரியாத ஒருவரிடம் நாம் பெரிதாக ஒன்றும் அளவளாவிட முடியாதுதானே? நன்றி சொல்தலும் வணக்கம் சொல்தலுமாக இருந்த காலகட்டம். கோவிட் பெருந்தொற்று.

*வேணு* , போலந்தில் இருக்கும் மகளைப் பார்க்கச் சென்றவர் அங்கேயே இருக்கும்படி ஆகிவிட்டது. அன்றாடம் நம்மிடம் பேசுவார். எங்கள் அலுவலகம் _கிராக்கோவ்_ , _வார்சா_ ஆகிய இரு நகரங்களிலுமே உள்ளது. அணுக்கமான நண்பர்கள் நமக்கு அங்கு உண்டு. ஏதாகிலும் உதவி தேவைப்பட்டால் சொல்லுங்களென்றேன். ஊருக்கு டிக்கெட் மாத்திரம் ஏற்பாடு செய்யக் கேட்டுக் கொண்டார். நானும் அலுவலகத்தில் சொல்லி வைத்திருந்தேன். ஆனால் எனக்குத் தகவல் வருவதற்கு முன்னம் அவரேவும் ஏற்பாடுகள் செய்து கொண்டார். பயணக்கட்டுப்பாடுகள் எல்லாம் தளர்ந்தபின்னர் ஊருக்கு வந்திருந்த நேரத்தில் ஒரு சில முறை சந்தித்துக் கொண்டோம்.

வாழ்க்கை என்பது நிச்சயமற்ற ஒரு பயணம். எப்போது எந்தத் திருப்பம் வருமென்று யாருக்கும் தெரியாது. மரணம் என்பது வாழ்வின் நிரந்தரம். அந்த நிஜத்தின் முன் நின்று பார்க்கையில், நம் கையில் இருப்பது இந்தத் தற்காலம் மட்டுமே! இறப்பைப் பற்றிய அச்சத்திலோ அல்லது கடந்த காலத்தின் வருத்தங்களிலோ, நம் பொன்னான நிகழ்காலத்தை விரயம் செய்ய வேண்டியதில்லை. இனிமேல் வரப்போகும் நாட்களைப் பற்றிக் கனவு காண்பதை விட, இன்று என்ன செய்ய முடியுமென்பதில் கவனம் செலுத்தியாக வேண்டும். ஒவ்வொரு விடியலும் ஒரு புதிய வாய்ப்பு; ஒவ்வொரு மூச்சும் ஒரு கொண்டாட்டம். இந்த நொடியில் முழுமையாக வாழ்ந்திடுவோம்; உணருங்கள், சிரியுங்கள், அன்பு செலுத்துங்கள்!

நேசித்தவர்களோடு நாம் கழித்த நாட்களை நினைத்துத் துயரப்படுவதற்குப் பதிலாக, அவர்கள் நமக்கு அளித்த மகிழ்ச்சியான தருணங்களை எண்ணிப் பார்க்க வேண்டும். வாழ்க்கைப் பயணத்தில் இருந்து விடைபெற்றுக் கொண்டோரின் நினைவுகள்தான் நம்முடைய விலைமதிப்பற்ற சொத்து. நாம் சிரித்த சிரிப்புகள்... ஒருவருக்கொருவர் அளித்த ஆறுதல்கள்... ஒன்றாகப் பகிர்ந்து கொண்ட தருணங்கள்... இவை அனைத்தும் காலத்தால் அழியாத செல்வம். அந்த நினைவுகளின் ஒளியில், நம் எஞ்சிய வாழ்வை நாம் வாழ வேண்டும். அவர்கள் நம்முடன் இல்லாவிட்டாலும், அவர்களின் அன்பின் சுவடுகள் நம் இதயத்தில் என்றென்றும் பதிந்திருக்கும்.

துயரத்தை ஒதுக்கிவிட்டு, நேசத்துக்குரியவர்களுடன் நாம் பகிர்ந்த அனுபவங்களின் ஆனந்தத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். இந்த வாழ்க்கை நமக்கான, ஒரு அற்புதமான கதை. அதில் ஒவ்வொரு நொடியும் நாம் நாயகனாக வாழும்போது, மரணம் என்பது ஒரு முடிவாக இல்லாமல், நிறைவான ஒரு பயணத்தின் ஓய்வாக மாறும். வாருங்கள், வருத்தம் வேண்டாம். அன்னாரின் அன்பின் நினைவுகளோடு, தற்காலத்தைத் துணிவாக எதிர்கொள்வோம்! அன்பனுக்கு *மலர்வணக்கம்* !

𝐌𝐚𝐲 𝐭𝐡𝐞 𝐠𝐨𝐨𝐝 𝐭𝐢𝐦𝐞𝐬 𝐰𝐞 𝐞𝐱𝐩𝐞𝐫𝐢𝐞𝐧𝐜𝐞𝐝 𝐫𝐞𝐬𝐨𝐧𝐚𝐭𝐞 𝐭𝐡𝐫𝐨𝐮𝐠𝐡 𝐭𝐡𝐞 𝐫𝐞𝐬𝐭 𝐨𝐟 𝐨𝐮𝐫 𝐣𝐨𝐮𝐫𝐧𝐞𝐲.


-பழமைபேசி.

12/06/2025

மணிகண்டன் கனகசபை

மணிகண்டன் கனகசபை

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் தகவல்தொடர்புக்குழு உறுப்பினர். தொடர்ந்து தொடர்பில் இருந்து கொண்டு, பேரவை நிகழ்ச்சிகள், திருவிழா முதலானவற்றின் காணொலிகளைப் பராமரித்து வந்தவர். 

தொடர்ந்து ஒத்துழைப்புக் கொடுப்பது என்பது, தனிப்பட்ட உறவுகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைத்து மட்டங்களிலும் வெற்றிகரமாகச் செயல்படுவதற்கான ஒரு மிக முக்கியமான பண்பாகும். இது வெறுமனே ஒருமுறை உதவுவது அன்று; மாறாக, ஒரு பொதுவான இலக்கை அடைய, ஒரு நல்லுறவைப் பேண, தொடர்ந்து இணைந்து செயல்படும் மனப்பான்மையைக் குறிக்கிறது. அந்த வகையில் திரு.மணிகண்டன் அவர்களுக்கு நன்றிகள் உரித்தாகுக.

திட்டங்கள் மாறும்போதோ அல்லது புதிய சவால்கள் வரும்போதோ, வளைந்து கொடுத்து, புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஒத்துழைக்கத் தயாராக இருக்க வேண்டும். அப்படியாக, திரு மணிகண்டன் அவர்கள் சிறப்புச் சேர்த்தார். விழாவில் நம்மைக் கண்டதுமே, வேலைகளுக்கு ஆட்கள் வேண்டுமாயெனக் கேட்டு, சில பலரை அறிமுகப்படுத்தினார். இஃகிஃகி, நமக்குத்தான் எவரையும் நினைவில் இருத்திக் கொள்ள முடியவில்லை. ஆனால் அறிமுகப்படுத்தப்பட்ட நண்பர்கள் வந்து, இடைக்கிடை, ‘அண்ணா, எதனா செய்யணுமா? எதனா செய்யணுமா??’ எனக் கேட்டபடி இருந்தனர்.

மேற்படி இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட நண்பர்களுள் ஒருவர் வந்து, ‘அண்ணே, மாரி செல்வராஜ் அவர்களுக்குத் தொண்டை வலியாம்; இன்ன மருந்துதான் வேண்டுமென்கின்றார். டாக்டரின் மருந்துச் சீட்டு இருந்தால்தான் வாங்க முடியும்’, என்றார். மருத்துவர் திரு. செந்தில் சேரன் அவர்களை அழைக்க, அவர் தமக்கு அந்த உரிம அனுமதி இல்லையென்றும், இன்னாரை அழையுங்களென, ஒருங்கிணைப்பாளர் திருமிகு. மீனா இளஞ்செயன் வழியாகத் தொடர்பு கொள்ளப் பணித்தார். திருமிகு மீனா அவர்கள், மருத்துவர் சுஜாந்தி இராஜாராம், மருத்துவர் சுஜாதா சஜிவன் ஆகியோரைத் தொடர்பில் கொணர்ந்தார். நண்பரிடம் அவர்களைக் கோர்த்துவிட்டபின் நாம் விடுபட்டுக் கொண்டோம். ஆனாலும் மற்றவர்கள் விடவில்லை. அடுத்தடுத்து மருத்துவம் குறித்த உதவிகளுக்கு முறைப்பாடுகள் வந்து கொண்டிருந்தன. சார்லட் மருத்துவர் இராஜேஷ் தோட்டா அவர்களிடமும் மகர் அவர்களிடமும் தள்ளிவிட்டுக் கொண்டோம். இந்த நேரத்தில் அவர்களுக்கும் நன்றிகள் உரித்தாகுக.

𝐖𝐡𝐞𝐫𝐞 𝐨𝐭𝐡𝐞𝐫𝐬 𝐬𝐚𝐰 𝐨𝐛𝐬𝐭𝐚𝐜𝐥𝐞𝐬, 𝐓𝐡𝐢𝐫𝐮 𝐌𝐚𝐧𝐢𝐠𝐚𝐧𝐝𝐚𝐧 𝐬𝐚𝐰 𝐬𝐩𝐚𝐜𝐞𝐬 𝐰𝐚𝐢𝐭𝐢𝐧𝐠 𝐭𝐨 𝐛𝐞 𝐟𝐢𝐥𝐥𝐞𝐝, 𝐚𝐧𝐝 𝐡𝐞 𝐟𝐢𝐥𝐥𝐞𝐝 𝐭𝐡𝐞𝐦 𝐰𝐢𝐭𝐡 𝐬𝐞𝐫𝐯𝐢𝐜𝐞, 𝐤𝐢𝐧𝐝𝐧𝐞𝐬𝐬, 𝐚𝐧𝐝 𝐩𝐮𝐫𝐩𝐨𝐬𝐞.

அன்புடன் தாங்கள் செய்யும் ஒவ்வொரு பணியும், இந்த நாளை ஒரு மறக்க முடியாத அழகான நினைவாக மாற்றும் ஆற்றல் கொண்டது. தங்கள் உதவிகள் ஏதோவொரு வகையில், ஏதோவொரு தருணத்தில் தங்கள் வாழ்விற்கான பொருண்மியத்தைக் கொடுக்க வல்லது. சிறப்புகள் பெற்றிடுவீர் திரு மணிகண்டன் கனகசபை.

-பழமைபேசி.
#PROTeam #FeTNA2025

12/02/2025

செந்தில்குமார் கலியபெருமாள்

செந்தில்குமார் கலியபெருமாள்

மின்னசோட்டா தமிழ்ச்சங்கத்தின் தலைவர், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் தகவல்தொடர்பு, தொழில்நுட்பக் குழுக்களின் துணைத்தலைவர், நம் நெடுங்கால நண்பர்.

கருப்பெட்டிச் சோதனை என்பது  சோதனையின் ஒரு வகையாகும். இதில், ஒரு சோதனையாளர், சோதிக்கப்படும் பொருள், அதன் உள்ளீடு, குறியீடுகள், விவரங்கள் பற்றி எந்தவொரு தகவலும் அறிந்திரா நிலையில், முன்நிலைப்பாடற்றுச் சோதனைகளைச் செய்வார். இந்தச் சோதனையில், பொருளானது ஒரு 'கருப்பெட்டி' போலக் கருதப்படுகிறது. அதாவது, அதன் உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியாது. கருவில் இருக்கும் உயிரின் அடையாளத்தன்மைகள், பண்புநலன்கள் எதுவும் நமக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது போல, இன்னபொருள், இன்ன கருவி முதலானவற்றின் உள்ளீடுகள், தனிநபர்கள், இடம் முதலானவற்றின் எதன் பின்னணியும் அறிந்திராமல், அது என்னமாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகின்றது என்பதனை சோதித்துப் பார்க்கும் முறை. தகவல் தொடர்புக்குழுவுக்குக் கிடைத்த அப்படியான ஒருவர்தாம் ‘அண்ணாச்சி’ என அன்போடு அழைக்கப்படுகின்ற திரு. செந்தில் கலியபெருமாள் அவர்கள்.

சச்சரவு, விமர்சனம், கொந்தளிப்பு போன்ற நுண்ணுணர்வு கூடிய தகவலை வெளிப்படுத்துகின்ற போது, நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், இது தனிப்பட்ட நபரின்பால் வெளியிடப்படும் தகவல் அன்று. மாறாக, ஆகக்குறைந்தது 20 ஆயிரம் பேருக்கு, அமைப்பின்பால் தெரிவிக்கப்படுகின்ற தகவல். 5% நுகர்வோர் மனம் புண்பட்டுவிடுகின்றதென வைத்துக் கொள்வோம். எஞ்சியிருக்கின்ற 95% பேரை நல்லவிதமாக அணுகியிருக்கின்றோம்தானே எனக் கொண்டுவிடலாகாது. ஏனென்றால், இதுவே வாடிக்கையாகி, பத்துமுறை நிகழ்கின்றதென வைத்துக் கொண்டால், 50% நுகர்வோரின் ஒவ்வாமைக்கு அது வித்திட்டுவிடும். நல்லதொரு தகவல்தொடர்புக்கு அடையாளம், நூற்றுக்கு நூறு வெற்றி கொள்வதாக இருந்திடல் வேண்டும். அப்படியான, நுண்ணுணர்வு கூடிய தகவல், செய்தியறிக்கை முதலானவற்றைச் சோதிக்க, திரு. செந்தில் அவர்கள் மிகவும் உதவிகரமாக இருந்தார். வெகுளித்தனமாக ஒவ்வொன்றையும் வினவும் போது, சரிசெய்து கொள்ளும் வாய்ப்புகள் நமக்குக் கிடைக்கின்றன.

அண்ணாச்சி அவர்கள் கலையுணர்வு மிக்கவர், பாடகர், தமிழுணர்வாளர் என்ற முறையில், காலவுணர்வினை வலியுறுத்தக் கூடியவர்.  “கோடைவிடுமுறைக் காலத்தை நம் பிள்ளைகள் குதூகலமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் செலவிட்டுக் கொண்டிருப்பரென நம்புகின்றேன். அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்”, தலைவர் மடல் முதலான பலவற்றிலும்,  இது போன்ற வாழ்வியலுக்கு நெருக்கமான வரிகள் இடம் பெறுவதற்கு, அளவளாவலின் போது இவர்கள் தருகின்ற கண்ணோட்டங்களே காரணமாக இருந்தன.

விழா துவங்கி விட்டது. நேரலை உலகுக்கே வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ‘மங்கல இசை’, ‘மங்கள இசை’, அக்கப்போர். இஃகிஃகி. இவருக்குப் பதற்றம். ஏனென்றால், விழாவின் அரங்குகளுக்கான ஒவ்வொரு பின்னணிப் படத்தையும் வடிவமைத்துச் செயற்படுத்தியவர் இவரே. “அண்ணாச்சி, உங்ககிட்ட சரி பார்த்திட்டுதானே செய்தன்?”, அலறுகின்றார். ‘மங்கல இசை சரிதானுங்க. என்ன பிரச்சினை இப்ப?’. ‘இல்ல அண்ணாச்சி, இன்னாரே சொல்றாங்க, அது பிழையின்னு’. மங்கலம் என்ற சொல் ஆக்கம், பொலிவு, நற்செயல், திருமணம், அறம், வாழ்த்து, நன்று போன்ற இடங்களில் கையாளப்படுவது. மங்களம் என்பது, நற்காரியத்தின் முடிவினைக் குறிப்பது’ என்றெல்லாம் சொல்லி வகுப்பெடுத்த பின்னர்தாம் அடங்கினார். அந்த அளவுக்கு நுண்ணுணர்வும் கடமையுணர்வும் மிக்கவர். தகவல்தொடர்பு என்பது மட்டுமேயன்று, பல குழுக்களின் வாயிலாகவும் பங்களித்தவர் திரு. செந்தில் கலியபெருமாள் அவர்கள்.

𝐁𝐞𝐜𝐚𝐮𝐬𝐞 𝐜𝐚𝐫𝐢𝐧𝐠 𝐚𝐛𝐨𝐮𝐭 𝐭𝐡𝐞 𝐬𝐮𝐛𝐭𝐥𝐞 𝐭𝐡𝐢𝐧𝐠𝐬 𝐦𝐚𝐤𝐞𝐬 𝐥𝐢𝐟𝐞 𝐦𝐨𝐫𝐞 𝐛𝐞𝐚𝐮𝐭𝐢𝐟𝐮𝐥.

-பழமைபேசி.

#PROTeam #FeTNA2025


 

12/01/2025

சரவணன் கிருஷ்ணன்

சரவணன் கிருஷ்ணன்

தகவல் தொடர்புக்குழுவால் என்ன செய்திட முடியுமென்பதைக் காண்பித்தோம். ஒரு அமைப்பின் தகவல் தொடர்பாளர், நிறுவனத்தின் வெளிப்புற, உள்புறத் தொடர்புகளை நிர்வகிப்பதற்கும், அதன் நற்பெயரைப் பேணுவதற்கும், அதன் குறிக்கோள்களை, செயற்பாடுகளைப் பரந்த பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதற்கும் பொறுப்பானவர் ஆவார். அவரின் முக்கிய பணிகள் கீழ் வருமாறு:

அமைப்பின் இலக்குகள், செய்தியை,  பார்வையாளர்களை ஈர்க்கக் கூடிய வகையில் தொடர்புத் திட்டங்களையும் உத்திகளையும் உருவாக்குதல், செயல்படுத்துதல்.

பத்திரிகை வெளியீடுகள், செய்திமடல்கள், இணையதள உள்ளடக்கங்கள், அறிக்கைகள், உரைகள், சமூக ஊடகப் பதிவுகள் போன்ற பல்வேறு வகையான உள்ளடக்கங்களை எழுதுதல், திருத்துதல், பரப்புதல் முதலானவற்றைச் செய்ய வேண்டும். அதற்கு, அமைப்பின் செயல்பாடுகள், திட்டங்கள், மதிப்புகள் குறித்து ஈர்க்கக்கூடியதும் உண்மையானதும் துல்லியதுமான தகவலை உருவாக்கிட வேண்டும்.

 ஊடகவியலாளர்களுடலும் உறுப்பினர்கள் தோழமை அமைப்புகளுடன் உறவுகளை ஏற்படுத்திப் பேணுதல் மிக அவசியம். வினாக்களுக்கும் விசாரிப்புகளுக்கும் முறையாகப் பதிலளித்து அக்கறை கொண்டாக வேண்டும்.

குறிப்பாக ஊடங்களிலும் பொதுவெளியிலும் வெளிவரும் செய்திகளைக் கண்காணித்தல், அதற்கொப்பச் செயற்பாடுகளை, எதிர்வினைகளை உடக்குடன் அமைத்துக் கொண்டாக வேண்டும். 

எண்ணிம, சமூக ஊடக மேலாண்மை, அமைப்பின் சமூக ஊடகக் கணக்குகளை நிர்வகித்தல், உள்ளடக்கத்தைப் பதிவிடுதல் மற்றும் கருத்துகளுக்குப் பதிலளிப்பதன் மூலம் பார்வையாளர்களுடன் ஈடுபடுதல். இணையதளத்தை புதுப்பித்தல்,உள்ளடக்கத்தை ஈர்க்கக்கூடியதாகவும் துல்லியமாகவும் இருப்பதை உறுதி செய்தல்.

உள் செய்திமடல்கள், அக இணையப் புதுப்பிப்புகள் மூலம் அமைப்புக்குள் தகவல் பரிமாற்றத்தை அமைத்துக் கொண்டு, அமைப்பினரின் செயல்பாடுகளும் அதற்கொப்ப இருக்குமாறு அறிவுறுத்திடல் வேண்டும். மாநாடுகள், நிகழ்வுகள்,  பிற விளம்பர நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்தலும் ஒருங்கிணைத்தலும்.

ஏதேனும் ஒரு நெருக்கடியான சூழ்நிலையில், எதிர்மறையான நிகழ்வின்போது, அமைப்பின் செய்திகள் தெளிவாகவும், துல்லியமாகவும் சரியான நேரத்திலும், உறுப்பு அமைப்புகளுக்கும் பொதுமக்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்தல்.

தகவல் தொடர்புக்குழுவினர் எப்போதும் ஒருவருக்கொருவர் அளவளாவிக் கொண்டும் பணிகளைப் பங்கிட்டுக் கொண்டும் இருந்தனர். வட அமெரிக்காவெங்கும், ஏன் உலகமெங்கும் பேரவைக்கான ஆர்வலர்கள் உள்ளனர். பல பகுதிகளிலும் பல நிகழ்வுகள் நடக்கும். அப்படியானவற்றைக் கண்காணித்து, அமைப்பின் தகவலை அதற்கொப்ப அமைத்துக் கொள்தலுக்கும், திருவிழா குறித்த பொதுமக்களின் எதிர்பார்ப்பினை அறிந்து உடனுக்குடன் நமக்கு கொண்டு வந்து சேர்ப்பதற்குமான சிறந்த தொடர்பாளராக விளங்கியவர்தாம் உய்த்துணர்வில் சிறக்கும் திரு. சரவணன் கிருஷ்ணன் அவர்கள். 

தமிழ், மக்கள், பண்பாடு முதலானவற்றின்பால் அக்கறை கொண்டவர். விழாவின் பயணக்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். குறைவான கட்டணத்தில் விடுதி, குழுவாகப் பயணம் செய்வதன் மூலம் செலவுக்குறைப்பு உள்ளிட்ட பல ஏற்பாடுகளை தொடர்பு கொண்ட ஆர்வலர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க நம்மோடு துணை நின்றவர் திரு. சரவணன் கிருஷ்ணன் அவர்கள்.

’ஏப்பா, மெய்யாலுமே இத்தனையும் செய்யப்பட்டதா?’ என்றால், ஆமாம், செய்யப்பட்டதுதான்!

𝐖𝐢𝐭𝐡 𝐭𝐡𝐞 𝐫𝐢𝐠𝐡𝐭 𝐜𝐨𝐥𝐥𝐚𝐛𝐨𝐫𝐚𝐭𝐨𝐫, 𝐞𝐯𝐞𝐫𝐲 𝐏𝐑 𝐦𝐢𝐬𝐬𝐢𝐨𝐧 𝐛𝐞𝐜𝐨𝐦𝐞𝐬 𝐚 𝐬𝐭𝐨𝐫𝐲 𝐰𝐨𝐫𝐭𝐡 𝐭𝐞𝐥𝐥𝐢𝐧𝐠, 𝐚𝐧𝐝 𝐰𝐞 𝐣𝐮𝐬𝐭 𝐰𝐫𝐨𝐭𝐞 𝐨𝐮𝐫𝐬!🎉🎉

-பழமைபேசி.
தகவல் தொடர்புக்குழு, FeTNA 2025.

11/29/2025

வட அமெரிக்க வாகை சூடி - 2

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் மீது தேவையற்ற விமர்சனங்கள் வைக்கப்பட்டு மக்களின் ஒவ்வாமைக்கு இட்டுச் சென்றிருந்த காலமென ஒன்றிருந்தது. ஆனால் அப்போதேவும் மாணவர்களுக்கான போட்டிகள் எழுச்சியோடும் சீரோடும் இடம் பெற்று வந்தன. இணையவசதிகள் பிறநாடுகளில் தலையெடுக்கத் துவங்கி இருந்தது. அதைப் பயன்படுத்திக் கொண்டு, பேரவையை உலகெங்கும் கொண்டு செல்லக் கூடிய பணிகள் செம்மையாக இடம் பெற்றன. 
  • நாடளாவிய அளவில், பல்வேறு கல்விக்கான முன்னெடுப்புகள், அமைப்புகள் வாயிலாக, அறிவியல், கணிதம், தானியங்கியல், இசை முதலான போட்டிகளில் நம் பிள்ளைகளும் பெருமளவில் பங்கு பெறுகின்றனர். எங்கும் பணமாகப் பரிசுகள் வழங்குவதில்லை. 
  • உளவியலாளர்களும் கல்வியாளர்களும் சொல்வது யாதெனில், பணம் போன்ற பெரிய வெளிப்படையான வெகுமதிகள், உண்மையில் ஒரு மாணவரின் உள்ளுணர்வுத் தூண்டுதலை குறைமதிப்பிற்கு உட்படுத்தும். பரிசுப் பணமாக அல்லாமல் (எ.கா., கோப்பை, பதக்கம், அல்லது சிறப்புச்செய்தல்) இருக்கும்போது, ​​கவனம் முழுவதும் கற்கும் செயல்முறை, திறன் மேம்பாடு, வெற்றிக்குரிய மரியாதை ஆகியவற்றில் இருக்கும். பணத்தின் மீதிருக்காது. பெற்றோர்களின் இடையூடுகளையும் மட்டுப்படுத்தும்.
  • பணம் கொடுப்பது கல்வியின் இலக்கிற்கு முரணாக, கல்வியின் சீரிய தன்மையிலிருந்து, பொருளாசையை நோக்கிக் கவனத்தை மாற்றும். பரிசுகள், ஒரு நினைவுச் சின்னமாக (plaque, custom medal, or unique book set) இருக்கும்போது, ​​அது செயற்பாட்டின் மறக்கமுடியாத சின்னமாக அமைகின்றது.
  • அமெரிக்காவில், ஒரு ரொக்கத் தொகையானது, சட்டப்படி "பரிசு" என்று கணக்கிடப்பட்டால், அது வெற்றி பெறும் மாணவரின் வரி செலுத்த வேண்டிய வருமானமாக மாறும். இதனால்,  வரிப் படிவங்களை (1099-MISC) மாணவருக்கு வழங்க வேண்டும், சில இடங்களில் வரியையும் பிடித்தம் செய்ய வேண்டிய நிலை வரும்.
மேற்கூறப்பட்ட காரணங்களின் நிமித்தம், 2010 காலகட்டத்திலேயே பணமுடிப்புக்கு எதிராக நாம் கிளர்ச்சிகள் செய்தது உண்டு. ஆமாம், நாம் செய்த கிளர்ச்சிகளுக்கு அளவேயில்லை. இஃகிஃகி. கவனம், போட்டியின் தரத்திலும் நயத்திலும் இருக்க வேண்டுமேவொழிய, பணம், பணம் தொடர்பான விளம்பரங்களென இருக்கக் கூடாது. நம் கருத்தினைப் பொருளாளரிடம் சொல்ல, எஞ்சியதை அவர் பார்த்துக் கொண்டார். அன்னாருக்கு நன்றி.

நண்பர் செளந்தர் அவ்வப்போது யோசனைகள் சொல்லிக் கொண்டிருப்பார். தேர்தலிலும் போட்டிகள் குறித்த கருத்தாடல்கள் இடம் பெற்றிருந்தன. பொறுப்புகள் கிட்டியவுடன் மளமளவென குழுக்களை அமைக்கும் பணிகள். வட அமெரிக்க வாகை சூடி, அதற்கான ஆவணங்கள் கட்டமைக்கப்பட்டன. விழாவுக்கான பணிகளும் துவக்கப்பட்டன. வழிகாட்டுதல்க்குழு உறுப்பினரின் யோசனைக்கொப்ப நீங்கள் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்க முடியும்தானேயெனக் கேட்டார் பேரவைத் தலைவர். ஒருவிநாடி கூட யோசிக்காமல், மறுத்துவிட்டோம். ஏன்? விழா நடத்துகின்ற ஊரிலிருந்தேவும் எதிர்ப்பு வரும், ஒரு குறிப்பிட்ட பொறுப்புக்குள் அடைபடுவதையும் நாம் விரும்பவில்லை, ஒருங்கிணைப்பாளர்களுக்கெல்லாம் ஒருங்கிணைப்பாளராக அடைமொழியேதுமற்று இருத்தல் சுகமென நினைத்தது உள்ளிட்டவைதான் காரணங்கள். வட அமெரிக்க வாகை சூடிக்கான ஒருங்கிணைப்பாளர்? அவசியம் உள்ளூரில் இருக்கும் ஒருவர்தாம் அந்தப் பொறுப்பில் இருந்தாக வேண்டுமென்பதையும் தெரிவித்து விட்டோம்.

நாம் பணியாற்றாத குழுவேயில்லையெனச் சொல்லுமளவுக்கு அன்போடும் அக்கறையோடும் எல்லாக் குழுவினரும் நம்முடன் தொடர்பில் இருந்தார்கள். ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டோம். திருமிகு பரணி அவர்கள், தொடர்ந்து, நம்மிடம் இடம் பெறும் பணிகள் குறித்து அளவளாவியபடி இருந்தார். பதற்றம், பரபரப்பு என்பதெல்லாம் வெகுகுறைவு. வாசிங்டன் டிசி பகுதியிலிருந்து ஒருவர், உள்ளூரிலிருந்து ஒருவர், மிச்சிகன் மாகாணத்திலிருந்து ஒன்று, இவைதாம் நமக்கு நினைவுக்கு வருகின்றன.  பொருட்படுத்தக் கூடிய அளவில் பெரிதாக ஒன்றுமிருந்திருக்கவில்லை. விழாநாளும் வந்துவிட்டது. 

முதல்நாள், நண்பகல் உணவுநேரத்தில் நெருக்கடி. நண்பர்களின் உதவியால் சமாளித்தோம். இரண்டாம் நாள் கோப்பைகள்,பதக்கங்கள் வைக்க இடம் வேண்டும். அறை இல்லை. அரங்க மேலாளரை அவரது அறையில் சென்று பார்த்துப் பேசி, அழைத்து வந்து போட்டிகள் நடந்து கொண்டிருப்பதைக் காண்பித்தோம். புரிந்து கொண்டார். கூடுதல் பணம் கொடுப்பதற்கில்லை. பார்த்து உதவுங்களென்றோம்; குறிப்பாக பூட்டித் திறக்கும்படியான அறை கேட்டோம். நாம் மன்றாடியதைக் கண்ட அவர், கொடுத்து விட்டார். இஃகிஃகி. 

பதக்கங்கள், கோப்பைகள், உறைகள், இதரப்பரிசுப் பொருட்களென, அரங்கத்து அறைக்குள் வைப்பதற்கு உதவ வேண்டுமென மருத்துவர் திரு. செந்தில் சேரன் அவர்கள் வேண்டினார். அதேநேரத்தில் எனக்குப் பல வேலைகள். நம்மிடம் இருந்த கூடுதல் பாஸ்களை, நண்பர்கள் கான்சாஸ் இராஜேஷ் ஜேசுராஜ், வெங்கட் உள்ளிட்டோரிடம் கொடுத்து, அவருக்கு உதவும்படிச் சொல்லவே, அவர்களும் அந்த வேலையைப் பார்த்துக் கொண்டனர். அவர்களுக்கு நன்றி.

முதல்நாள்(ஜூலை 4) விருது வழங்கலுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் 60 நிமிடங்கள். எடுத்துக் கொண்ட நேரம் 40 நிமிடங்கள். இரண்டாம் நாள்(ஜூலை 5) விருது வழங்கலுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் 90 நிமிடங்கள். எடுத்துக் கொண்ட நேரம் 50 நிமிடங்கள். வழங்கப்பட்ட பதக்கங்கள் 840. கோப்பைகள் 247. சான்றிதழ்கள் 1600+.  பயன்படுத்திக் கொண்ட அறைகள், ஜூலை 3ஆம் நாள் 9, ஜூலை 4ஆம் நாள் 4, ஜூலை 5ஆம் நாள் 2. மேடை நேரத்திலும் சரி, அறைகள் பயன்பாட்டிலும் சரி, எவ்வளவு சிக்கனத்தைக் கடைபிடிக்க முடியுமோ அவ்வளவு சிக்கனத்தைக் கடைபிடித்திருக்கின்றோம். 

அன்போடும் அக்கறையோடும் பிள்ளைகள் ஒவ்வொருவரையும், ஒருமுறைக்குப் பலமுறை(ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியாக) மேடையேற்றி, பதக்கம் அணிவித்து, சான்றிதழ் வழங்கியென எல்லா முறைமைகளையும் செய்து கொடுத்தவர்களுக்குப் பாராட்டுகள். எல்லாமும் சிறப்பாக முடிந்தநிலையில், ஒருங்கிணைப்பாளர் திருமிகு பாரதி முருகேசன் வந்து சொன்னார். “அண்ணா, உங்களுக்கானதை நீங்கள் இப்போதே பெற்றுக்கொள்ளுங்கள்”. சுற்றிலும் பார்த்தேன். யாரையுமே, எந்த செயற்குழு, வழிகாட்டுதல்க் குழுவினரையும் காணோம். ஒருங்கிணைப்பாளர்கள், திருமிகு பரணி, நான் என எல்லாருமே கேரொலைனா தமிழ்ச்சங்கத்தைச் சார்ந்தவர்கள். நமக்கு நாமே திட்டத்தின் கீழ், எங்களை நாங்களே புகழ்ந்து, பாராட்டி படமெடுத்துக் கொண்டோம். https://www.youtube.com/live/nAB7JvPt2pQ?si=WLhVqDm8sM3ieGEK&t=8802 இஃகிஃகி. பெற்றோர்கள், மாணவர்கள், நடுவர்கள், நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களின் வெற்றி.

மேடையை விட்டிறங்கி நமக்குக்கிடைத்த பதக்கம், பொன்னாடையை வீட்டாரிடம் தரலாமென நினைத்துச் சென்று கொண்டிருந்தேன். எதிரில் ஒருவர் ’தபதப’வென பிள்ளையை இழுத்துக் கொண்டபடி வந்தவர், ’எல்லாம் முடிஞ்ச்சுங்ளா, நாங்க லேட்டு, எங்க பிள்ளைக்குப் பதக்கம்?’. ’இந்தாங்க இது எனக்குக் கொடுத்தது’, நானே பிள்ளையின் கழுத்தில் போட்டு, அந்தச் சிறு பெட்டியையும் கொடுத்து அனுப்பி வைத்தேன். நான்கு தப்படி எடுத்து வைத்தேன். மற்றுமொரு தம்பி வந்தார். “பழமபேசி அண்ணை, பொட்டிகளை எடுத்தாரச் சொன்னவைக...” என இழுத்தார். இவர்தாம், இந்த மூன்று நாட்களாகப் பெட்டிகளை அங்குமிங்கும் நகர்த்தும் பணியைச் செய்து கொடுத்தவர்; செக்யூரிட்டி ஆட்களின் இம்சைகளுக்கு இடையேவும். கையிலிருந்த பொன்னாடையை தம்பிக்குப் போர்த்தி எல்லாம் ஆச்சுது, எடுத்துச் செல்ல ஒன்றுமில்லையெனச் சொல்லியபின் வீட்டாரை நோக்கிச் சென்றேன். பாரமெல்லாம் இறங்கி, சூன்யமாகி, நீர்ப்பரப்பின் மேலே அசைந்து அசைந்து ஆடிச்செல்லும் அன்னம் போலிருந்தது மனம்!

𝐓𝐡𝐢𝐬 𝐢𝐬𝐧’𝐭 𝐚𝐛𝐨𝐮𝐭 𝐰𝐢𝐧𝐧𝐢𝐧𝐠. 𝐈𝐭’𝐬 𝐚𝐛𝐨𝐮𝐭 𝐬𝐡𝐚𝐤𝐢𝐧𝐠 𝐭𝐡𝐞 𝐠𝐫𝐨𝐮𝐧𝐝.

[முற்றும்]

-பழமைபேசி.

வட அமெரிக்க வாகை சூடி, FeTNA 2025.

11/28/2025

வட அமெரிக்க வாகை சூடி


அமெரிக்காவின் தலையாய செவ்வியல்த் திரைப்படம் ஒன்று உள்ளது. ஒவ்வோர் ஆண்டு நத்தார்நாள் (Christmas) விடுமுறைக்காலத்தின் போதும், உலகெங்கும் கோடிக்கணக்கானோரால் பார்க்கப்படுகின்ற படம். குடும்பம் குடும்பமாக உட்கார்ந்து, ஆண்டுதோறும், திரும்பத் திரும்பப் பார்க்கப்படுகின்ற படம். அதுதான் It's a Wonderful Life (1946). ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் அது நமக்குள் ஒரு பாடத்தை விதைத்துச் செல்லும் வன்மை கொண்டது.

ஜார்ஜ் பெய்லி என்ற ஒரு நல்லெண்ணம் கொண்ட, தன்னலமற்ற மனிதனின் கதையைச் சொல்கிறது இந்தப்படம். அவர் பெட்ஃபோர்ட் ஃபால்ஸ் என்ற சிறிய நகரத்தில் வாழ்கிறார். தன் வாழ்நாள் முழுவதும், ஜார்ஜ் தன் பெரிய கனவுகளான உலகைச் சுற்றுவது, கல்லூரிக்குச் செல்வது போன்றவற்றைத் தியாகம் செய்து, குடும்பத் தொழிலான பெய்லி பிரதர்ஸ் பில்டிங் அன்ட் லோன் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் மூலம் அவர் மலிவு விலையில் வீடுகளை வழங்குகின்றார். அதேநேரம், பேராசை கொண்டவரும் கொள்ளை கொள்பவருமான வங்கியாளர் மிஸ்டர். பாட்டருக்கு எதிரான தன் கிளர்ச்சியையும் மேற்கொள்கின்றார்.

கதை 1945 ஆம் ஆண்டு நத்தார்நாள் முன்மாலையில் தொடங்குகிறது. ஜார்ஜ் தற்கொலை பற்றி யோசிக்கிறார். ஏனெனில், அவரது மறதி பிடித்த மாமா பில்லி, நிறுவனத்தின் $8,000 பணத்தைக் கோட்டை விட்டுவிட, அந்தப் பணத்தை மிஸ்டர். பாட்டர் எடுத்து வைத்துக்கொள்கிறார். நிதி அழிவு, குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் ஜார்ஜ், தன் வாழ்க்கை தோல்வி அடைந்துவிட்டதாக நம்பி ஒரு பாலத்தில் இருந்து குதிக்கத் தயாராகிறார். குடும்பத்தினர்,  நண்பர்களின் வேண்டுதல்கள் விண்ணை அடைந்தவுடன், அவரைக் காப்பாற்ற பூமிக்கு தேவலோகதேவதை ஒருவர் அனுப்பப்படுகிறார்.

ஜார்ஜ் பிறந்திருக்காவிட்டால் பெட்ஃபோர்ட் ஃபால்ஸில் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதை தேவலோகதேவதை ஜார்ஜுக்குக் காட்டுகிறார். இந்த மாற்று யதார்த்தத்தில், ஜார்ஜின் தம்பி ஹாரி குழந்தையாக இருக்கும்போதே இறந்துவிடுகிறான், ஏனெனில் அவனைக் காப்பாற்ற ஜார்ஜ் அங்கு இல்லை. இதன் விளைவாக, போரில் ஒரு கப்பலைக் காப்பாற்றுவதற்காக ஹாரி அங்கில்லை. இப்படியாக அடுத்தடுத்துக் காட்சிகள் விரிகின்றன.

பெயர்கள் பெரும்பாலும் அடையாளம், வரலாறு, பண்பாடு முதலானவற்றைத் தாங்கி நிற்கின்றன. பெயரிடும் செயல் ஒரு படைப்புச் செயல் ஆகும். கொடுக்கப்படும் பெயரானது, அதன் வளர்ச்சி, மதிப்பு, எதிர்கால வெற்றியைப் பெரிதும் பாதிக்கக்கூடிய ஒரு சக்தி வாய்ந்த கருவியாகும். ’மேன்மை அணி’, ‘வட அமெரிக்க வாகை சூடி’, ‘கலைத்தேனீ, படைப்புத்தேனீ, அறிவியற்தேனீ’ எனப் பெயர்கள் சூட்டியதிலிருந்து, இயக்கமாக மாறியது வரையிலும் நாம் மனமார்ந்து கொள்ள நிறைய இருக்கின்றன.

பாராட்டுகளுக்காகவும் அங்கீகாரத்துக்காகவும் தன்னார்வத் தொண்டர்கள் சோர்வடையத் தேவையில்லை. ஒவ்வொருவருக்கும், பிறந்திருப்பதற்கான காரணங்கள் ஆயிரமாயிரம் உண்டு. நீங்கள் இதைச் செய்திராவிட்டால், அதன் விளைவுகள் வேறுமாதிரியாக ஆகியிருந்திருக்கக் கூடும். தங்கள் பிறப்புக்குப் பயன் உண்டு, விழுமியம் உண்டு, நோக்கம் உண்டு. தன்னார்வலரைப் பற்றி எழுதுகின்றோம். யாரோ ஒருவர் அதனை அவரின் ஊரில் இருக்கும் அம்மாவுக்கு, அப்பாவுக்கு அனுப்பி வைக்கின்றார்கள். அந்த உள்ளம் மகிழ்ந்து ஆற்றுப்படுகின்றது. அந்த உவப்பினூடாக அவர் நல்லதாக இன்னொன்றைச் செய்வார். உலகு இயங்குவது இப்படித்தான்!

மேற்கூறப்பட்ட திரைப்படமேவும் ஓர் எடுத்துக்காட்டு. 1946ஆம் ஆண்டு வெளியாகி, தயாரிப்புத் தொகையான 6 மில்லியன் டாலர்களில் பாதி அளவுக்குக்கூட வருவாய் பெறவில்லை. தோல்விப்படமாக அமைந்தது. நிறுவனம் அடுத்தடுத்துப் படங்களைத் தயாரிக்க முடியவில்லை. 1974ஆம் ஆண்டு காப்பீட்டு உரிமை காலாவதி ஆகிவிடுகின்றது. மனித அறிவு நாளுக்கு நாள் மேம்பட்டுக் கொண்டே வருகின்றது. படைப்பின் விழுமியமும் நாளுக்கு நாள் உலகுக்குப் புலப்படத் துவங்குகின்றது. அந்த நேரத்தில் அது தோல்விப்படம். இன்றைக்கு அது அமெரிக்காவின் தலையாய செவ்வியல்ப்படம். செய்வது நன்றெனின் வென்றேதீரும் என்றாவது!

(தொடரும்)

வட அமெரிக்க வாகை சூடி, FeTNA 2025.


-பழமைபேசி.
 

11/27/2025

காயத்ரி சண்முகசுந்தரம்

காயத்ரி சண்முகசுந்தரம்

பிள்ளைகள் இடைநிலைப் பள்ளியில் இருந்தபோது, அவர்கள் இத்தனை மணிநேரம் தன்னார்வத் தொண்டு புரிய வேண்டுமென இருந்தது. அவர்கள் பல பணிகளும் செய்பவர்கள்தாம். இருந்தாலும், ஏனோ அருகிலுள்ள உணவு வழங்கல் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் (secondharvestmetrolina) பணிபுரிய ஆசைப்பட்டனர். குழந்தைகளுடன் பெரியவர் எவரேனும் ஒருவர் இருக்க வேண்டுமென்பது நிபந்தனை. நாங்கள் குடும்பமாகவே சென்றிருந்தோம். பின்னர், கிட்டத்தட்ட அது ஒரு வாடிக்கையாகவே ஆகிவிட்டது. உள்ளே சென்று விட்டால் வேலை முசுவாக இருக்கும். இரண்டரை மணி நேரம்தான். ஆனால் எல்லாரும் இணைந்து செய்யும் போது, வேறெந்த சிந்தனைக்கும் இடமிராது. வீடு திரும்புகையில், யாதொரு தொடுப்புகளுமற்றுப் பணிகளின் நிமித்தம் ஆழ்ந்து கிடந்தபின் கிடைக்கப் பெற்ற மனவிடுதலையானது நம்மைக் களிப்புணர்வுக்கு(Euphoria) இட்டுச் சென்றிருக்கும். அத்துடன், பலவிதமான மக்களைக் காண்பதும் அவர்களுடன் பேசுவதும் புதிய அகத்திறப்பைக் கொடுப்பதாக இருந்தது,

இன்றைய பரபரப்பான உலகில், குடும்பங்கள் ஒன்றாக பொருண்மை மிக்கதாய் நேரத்தைச் செலவிடுவது சவாலானது.தொலைக்காட்சிகள், மொபைல் சாதனங்கள் இல்லாமல், அனைவரும் ஒரே நோக்கத்துடன் கலந்துகொள்ளும் தரமான நேரத்தை, கூட்டுத்தன்னார்வத் தொண்டு ஏற்படுத்திக் கொடுக்கின்றது. 

தன்னார்வத் தொண்டு செயல்பாடுகள் மூலம், பெரியவர்களும் குழந்தைகளும் புதிய சவால்களைச் சந்தித்து, குழுப்பணி, தலைமைப் பண்பு, இடர்தீர்க்கும் திறன்களைக் கற்றுக்கொள்கிறார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வதால் கிடைக்கும் மகிழ்ச்சி தனித்துவமானது. குடும்பமாகச் சேர்ந்து ஒரு சமூக மாற்றத்தை உருவாக்கும்போது, அது அனைவருக்கும் ஓர் ஆழமான மனநிறைவையும் பெருமையையும் அளிக்கிறது. குடும்பத்தை அவர்களின் சுற்றுப்புறம், உள்ளூர் சமூகத்துடன் இணைக்க உதவுகிறது. புதிய நபர்களைச் சந்திப்பதன் மூலம் சமுதாயத்தின் மீதான ஈடுபாடு அதிகரிக்கிறது.

பண்பாட்டு ரீதியாக முதல்தலைமுறைக் குடிவரவாளர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இருக்கும் இடைவெளியைக் குறைக்க, இத்தகு பணிகள் உதவுகின்றன. இவற்றையெல்லாம் நன்கு அறிந்து கொண்டு உதவியவர்களென இவர்களைச் சொல்லலாம்.  விஸ்கான்சின் தமிழ்ச்சங்கத்தின் ஆர்வலர்களாக இருந்து விட்டுத் தற்போது, சார்லட் தமிழ்ச்சங்க ஆர்வலர்களாக இருக்கின்றனர் திருமிகு. காயத்ரி சண்முகசுந்தரம் குடும்பத்தினர். திருமிகு காயத்ரி அவர்கள், நாடகப் போட்டிகளின் நிர்வாகி. நாடகங்களுக்கான ஒலிக்கோப்புகளைப் பெற்று, தொகுத்து, அந்தந்த வரிசைப்படி வைத்து அரங்கேற்றுவது, போட்டியாளர்களின் தேவைகளைக் கேட்டறிந்து ஏற்பாடுகளைச் செய்வதென தொடர்முழுதும் ஈடுபாட்டுடன் இருந்தவர். அவர்தம் இணையவர் அவர்கள் பாட்டுப் போட்டிகளின் நிர்வாகிகளுள் ஒருவர். புதல்வரோ இசைக்கருவிப் போட்டிகளின் நிர்வாகிகளுள் ஒருவர். வட அமெரிக்க வாகை சூடி போட்டிகளுக்கென குடும்பமே உழைத்தமையென்பதெலாம், விழாவின் பன்மைத்துவம், இணக்கம், கூட்டுறவு போன்றவற்றையே எடுத்தியம்புகின்றன.

It’s the choice to see someone else’s need and decide that your time, your hands, and your heart can help lighten their load. Every act, no matter how small, creates a ripple of hope. And when many people choose compassion at once, those ripples become waves of real change.

கலைகள் பல, ஒரே களம்: வட அமெரிக்க வாகை சூடி

வட அமெரிக்க வாகை சூடி, FeTNA 2025.

-பழமைபேசி.